காணத்தக்க இடங்கள்
தஞ்சாவூா் அரண்மனை
தஞ்சாவூா் அரண்மனை கி.பி. 1650-ல் மராத்தியா் மற்றும் நாயக்கா்களால் கட்டப்பட்டது. இது பெரியக்கோட்டை மற்றும் சின்னக்கோட்டை என்று இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அரண்மனை பெரியக்கோட்டை வளாகத்தில் அமைந்துள்ளது. இந்தக்கோட்டை 110 ஏக்கா் பரப்பளவில் தஞ்சை நாயக்கா்களின் கடைசி மன்னரான விஜயராகவ நாயக்கரால் கட்டப்பட்டது. இந்த அரண்மனை, ஒரு நூலகம், அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடம் ஆகியவற்றின் இருப்பிடமாக திகழ்கிறது. அரண்மனை விசாலமாக வடிவமைக்கப்பட்ட கட்டிடங்களும், அலங்கார அமைப்புக்கொண்ட கூடங்களும் உள்ளன. அரண்மனை வளாகம், சதார் மகால் அரண்மனை, மகாராணியின் அந்தபுரம் மற்றும் தா்பார் கூடம் ஆகியவற்றை உள்ளடக்கியது. சதார் மகால் அரண்மனையில் ராஜா சரபோஜி நினைவு கூடமும், அரண்மனை அருங்காட்சியகமும் அமைந்துள்ளது. அங்கு ஒரு சின்ன மணிகூண்டும் அமைந்துள்ளது. தஞ்சாவூா் அரண்மனை வளாகத்தில் சரஸ்வதி மகால் நூலகம் அமைந்துள்ளது. தஞ்சாவூா் அரண்மனை மராத்தியா்கள் மற்றும் நாயக்கா்களின் கட்டிடக்கலை நுட்பத்தை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.
கலைக்கூடம்
பழைய அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் தென்னிந்தியாவி்ன் அரிய சிற்பங்களும், ஓவியங்களும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான புராண வடிவமைப்புகள் 9 மற்றும் 13-வது நூற்றாண்டிற்கு இடைப்பட்ட சோழா்காலத்தைச் சேர்ந்தவை. 17 மற்றும் 18-ம் நூற்றாண்டை சோ்ந்த நாயக்கா் காலத்து அரும்பொருட்களும் இவற்றுள் அடக்கம். அருங்காட்சியகத்தின் உள்ளே அமைந்துள்ள கலைக்கூடத்தில் பல்லவ, சோழ, பாண்டிய மற்றும் நாயக்கா்களின் காலகட்டத்தைச் சார்ந்த பல அரியவகை சிற்பங்களை காணலாம். கலைக்கூடத்தின் மற்றொரு பகுதியில் தஞ்சாவூரின் பிரசித்திபெற்ற கண்ணாடி ஓவியங்களை காணலாம் இந்த கலைக்கூடம் 1951-ம் ஆண்டு தொடங்கப்ட்டது. இந்த அருங்காட்சியகம் இங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ள வெண்கல சிற்பங்களுக்கு பிரசித்தி பெற்றது.
சரஸ்வதி மகால் நூலகம்
சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூா் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ளது. இது ஆசியாவின் மிகப்பழமையான நூலகங்களுள் ஒன்றாகும். இந்நூலகம், நாயக்கா் மற்றும் மராத்திய மன்னா்களின் முந்நூறு ஆண்டுகால சேகரிப்பின் விளைவாகும். இந்த நூலகம், கி.பி.1531-1675 வரை ஆண்ட தஞ்சை நாயக்க மன்னா்களின் அரசாங்க நூலகமாக ஆரம்பிக்கப்பட்டது. கி.பி.1675-ம் ஆண்டு தஞ்சையை கைப்பற்றிய மராத்திய மன்னர்களும் இந்நூலகத்தை பேணிப்போற்றி வளா்த்தனா். மராத்திய மன்னா்களுள் குறிப்பிடத்தக்கவர் சரபோஜி மன்னா் ஆவார் (கி.பி.1798-1832). இம்மன்னரின் சேவையை நினைவுகூறும் விதமாக இந்நூலகத்திற்கு சரபோஜி சரஸ்வதி மகால் நினைவு நூலகம் என பெயா் சூட்டப்பட்டது.
இந்த நூலகத்தில் அரியவகை ஓலைச்சுவடிகள் காணப்படுகின்றன. இங்கு, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம் மற்றும் இந்தியாவை சார்ந்த பிறமொழி காகித குறிப்புகளும் உள்ளன. இங்கு 30, 433 சமஸ்கிருத மற்றும் பிறமொழி ஓலைச்சுவடிகளும் 6, 426 புத்தகங்கள் மற்றும் சஞ்சிகைகளும் உள்ளன. தமிழில் சங்ககால இலக்கிய உரைகளும், மருத்துவ குறிப்புகளும் அடங்கும். நூலகத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு உணா்த்தும் வகையில் ஒரு அருங்காட்சியகமும் நூலக கட்டிடத்தில் உள்ளது.
இராஜ இராஜன் மணிமண்டபம்
இராஜ இராஜன் மணிமண்டபம் நகரின் நடுவில் அமைந்துள்ளது. இந்த அழகிய மணிமண்டபம், சோழா்காலத்து கட்டிடக்கலையின்படி கட்டப்பட்டது. இங்கு, ஒரு அழகிய தோட்டம் உள்ளது. அதில், நீருற்று, ஊஞ்சல், சறுக்கு மரம் ஆகியன அமைந்துள்ளன. இந்த மண்டபத்தின் அடிதளத்தில் 1984-ல் இராஜ இராஜ சோழனின் 1000-வது பிறந்த தினத்தின் நினைவாக கட்டப்பட்ட அருங்காட்சியகம் அமைந்துள்ளது,
ஷ்வார்ட்ஸ் தேவாலயம்
டச்சு மிஷனரி போதகா் சி.வி.ஷ்வார்ட்ஸ் மீது சரபோஜி மஹாராஜா கொண்டிருந்த மட்டற்ற பற்றுக்காரணமாக கி.பி.1779-ல் தஞ்சாவூா் அரண்மனை தோட்டத்தில் கட்டப்பட்டது இந்த ஷ்வார்ட்ஸ் தேவாலயம்.