Close

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்

முன்னுரை

தமிழ்நாடு அரசு,  சென்னை மாநகர் நீங்கலாக மாநிலம் முழுவதும் உள்ள உள்ளாட்சிகளுக்கு  குடிநீர் திட்டங்கள் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டங்களை செயல்படுத்தும் நோக்குடன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தை சட்டபூர்வமான ஒரு நிறுவனமாக 14.04.1971 அன்று தோற்றுவித்தது.  சென்னையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம், தொழில்நுட்பம், நிதி மற்றும் நிர்வாகப் பிரிவுகளுடன் மேலாண்மை இயக்குநரை  தலைமை அதிகாரியாகவும், அரசு முதன்மைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அவர்களை தலைவராகவும்  கொண்டுள்ளது. வேலூர், தஞ்சாவூர், கோயம்புத்தூர் மற்றும்  மதுரை ஆகிய மண்டலங்களை தலைமையிடமாகக் கொண்டு, நான்கு தலைமைப் பொறியாளர்கள் உள்ளனர்.  தருமபுரியில் ஒரு திட்ட தலைமைப் பொறியாளர்  உள்ளார்.

நிறுவன விளக்கப்படம்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நிறுவன விளக்கப்படம்

 

கட்டுமான பொருள் சோதனை ஆய்வகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்

நான்கு தர கட்டுமான பொருள் சோதனை ஆய்வகங்கள் கோயம்புத்தூர், மதுரை, திருச்சி மற்றும் திண்டிவனம் ஆகிய இடங்களில் இயங்கி வருகின்றன.  கோயம்புத்தூர் மற்றும் மதுரை  சோதனை கூடங்களுக்கு  ISO 9001 : 2008 சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட கட்டுமான பொருள் சோதனை ஆய்வகங்கள், இந்திய தரக்கட்டுப்பாடு பணியகம் குறிப்பிட்டுள்ள சோதனை செயல்முறைகளின்படி, சோதனை செய்வதற்கு தேவையான இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் கருவிகளுடன் முழுமையான உபகரணங்கள் கொண்டவையாகும்.  தரம் மற்றும் இந்திய தரக்கட்டுப்பாட்டை உறுதி செய்யும்  வகையில் கீழ்க்கண்ட பொருள்களை பரிசோதனை செய்வதற்கான வசதிகள் உள்ளன:-

சிமெண்ட், கம்பி, மணல், ஜல்லி, செங்கல், கான்கிரீட் கண மாதிரிகள் போன்ற கட்டுமான பொருட்கள

வடிகட்டி மணல், ஹாலோ பிளாக்குள், பேவர் பிளாக்குள்

பி.வி.சி. குழாய், எச்.டி.பி.இ. குழாய், இரும்பு குழாய், நீள்மையுடைய இரும்பு குழாய்கள், அடுமண் குழாய்கள்

எம் 30 – கான்கிரீட் வடிவமைப்பு

மின் கேபிள்கள்

கட்டுமான பொருட்களை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய சோதனை ஆய்வகங்களில்  தர சோதனை செய்வதன் மூலம், ஒவ்வொரு திட்டப் பணியிலும் தர கட்டுப்பாடு உயர்த்தப்பட்டுள்ளது.  மேலும் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தனியாரிடம் இருந்து வரப்பெற்ற பொருட்களும் சோதனை செய்யப்படுகின்றன.

2016-17 ஆம் நிதியாண்டில், 4,716 கட்டுமான பொருள்களின் தர சோதனைகள் மேற்கண்ட நான்கு சோதனை ஆய்வகங்களில்  மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலாண்மை தகவல் அமைப்பு

அனைத்து திட்டங்கள், திட்ட மேலாண்மை, நிதி கணக்கியல், மனித வளம், பட்டிகள் தயாரித்தல் மற்றும் இதர பணிகள் சம்பந்தமான தகவல் பரிமாற்றங்களை மேலாண்மை செய்ய TWAD NEST எனப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட மின் ஆளுமை இணையத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செயல்படுத்தியுள்ளது.  பணி மற்றும் நிதி முன்னேற்றம்,  குடிநீர் வழங்கல் , பாதாள சாக்கடை மற்றும் பராமரிப்பு திட்டங்களின் செயல் திறன்கள் மற்றும் நீர் செறிவூட்டும் கட்டமைப்புகள் போன்றவற்றின் தகவல்கள் உடனுக்குடன் இணையத்தின் வழி (online) பெறப்படுகின்றன.  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்படும் கூட்டுக் குடிநீர்த் திட்டங்களின் தலைமை நீரேற்று நிலையங்களில் உந்தப்படும் குடிநீரின் அளவு தினமும் பதிவேற்றம் செய்யப்பட்டு உடனுக்குடன் இணையத்தின் வழி  (online) கண்காணிக்கப்படுகின்றது.

குடிநீர் பகிர்மானக் கட்டமைப்பு மற்றும் கழிவுநீர் குழாய் வடிவமைப்பு மற்றும் பகுப்பாய்வு, கட்டமைப்புகள் பகுப்பாய்வு போன்றவற்றில் திட்டமிடல் மற்றும் வடிவமைத்தலை மேம்படுத்த வடிவமைப்பு மென்பொருள் (CAD Software) பயன்படுத்தப்படுகிறது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் திட்டப் பணிகளின் முன்னேற்றத்தினை காலமுறையாக ஆய்வு செய்யும் பொருட்டு, சென்னை தலைமை அலுவலகம், கோவை, மதுரை, தஞ்சாவூர், தருமபுரி மற்றும் வேலூரில் உள்ள ஐந்து தலைமைப் பொறியாளர் அலுவலகங்கள் மற்றும் திருச்சி, கடலூர், சேலம், திருநெல்வேலியில் உள்ள நான்கு மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகங்கள் காணொளி காட்சி மூலம் இணைக்கப்பட்டுள்ளன.  இதன் மூலம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அனைத்து நடவடிக்கைகளையும் சிறந்த முறையில் ஒருங்கிணைத்து, திறம்பட கண்காணித்து வருகிறது.