பாரம்பரியம்
மரபு நடைபயணம்
1.தஞ்சைக் கோட்டை
சோழர் காலத்தில் வாழ்ந்த கருவூர்த் தேவர் “இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேஸ்வரம்” எனப் பாடியுள்ளார். இதன் மூலம் சோழர் காலத்திலிருந்தே தஞ்சாவூரில் கோட்டை இருந்ததாகத் தெரிகிறது. தஞ்சையில் சின்னக் கோட்டை, பெரிய கோட்டை என்று இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைப் பகுதிகள் உள்ளன. சின்னக் கோட்டை, தஞ்சை நாயக்க மன்னர் செவ்வப்ப நாயக்கரால் கி.பி. 1541-1580 இல் அமைக்கப்பட்டது. இதனுள் பெரிய கோவில், சிவகங்கை குளம், சிவகங்கை பூங்கா, சுவர்ட்சு கிறிஸ்துவ தேவாலயம் ஆகியன அமைந்துள்ளன.
பெரிய கோட்டை இக்கோட்டை தஞ்சை நாயக்கர் வம்சத்தின் கடைசி மன்னர் விஜயராகவ நாயக்கரால் கி.பி. 1630-1674 அமைக்கப்பெற்றது. இது சுமார் 530 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதனுள் தஞ்சை அரண்மனை வளாகமும், மக்கள் வாழிடமும், கோயில்களும் அமைந்துள்ளன.
2.தஞ்சை வீணை
தஞ்சை வீணை எனப் புகழ்ப்படும் வீணை அமைப்பினை உருவாக்கி தந்தவர் இரகுநாத நாயக்கர் ஆவார். இரகுநாதன் காலம் வரை இருந்த தமிழ்நாட்டு வீணைகளில் “பந்தல்” எனப்படும் குடம் நீள் வட்டமாகவும் “கோடு” எனப்படும் தண்டு உயரம் குறைவானதாகவும் இருந்ததோடு தண்டில் 16+1 மெட்டுக்கள் தாம் இருக்கும். இம்மெட்டுக்கள் கோல் எனப்படும் உலோகக் குச்சியால் அமைக்கப்பெற்று மெழுகு கொண்டு தண்டோடு இணைக்கப்பெற்றிருக்கும். இதனை மேளம் எனக் குறிப்பர். இதனால் ஒரு குறிப்பிட்ட இராகத்தினை வாசித்தவுடனேயே வேறு இராகம் வாசிக்க வேண்டுமெனின் மெட்டுக்களை மாற்ற வேண்டிய நிலை இருந்தது. இதனால் வட இந்திய சாரங்கி போன்ற நகரக் கூடிய கோல்களை (Frets) உடைய வீணைகளைக் கொண்டு வாசித்து வந்தனர்.
இக்கருவியைக் கையாளுவதில் இருந்த இடர்பாடுகளைக் களைய வேண்டும் எனக் கருதிய இரகுநாதன் தனது நுட்ப அறிவால் பந்தல் எனப்படும் தண்டினை நீளமடையச் செய்து, அதில் தந்திரிகம் எனும் மூடு பலகையை இணைத்து, அதன் மேலாக முன்பு வழக்கத்திலிருந்து 16+1 மெட்டுகளுடன் மேலும் எட்டு மெட்டுக்களை இணைத்து ஆகக் கூடுதல் 24 மெட்டுக்களுடன் இரண்டு தான நிலைகளை (ஸ்தாயிகளை) உடைய புதிய வீணை ஒன்றை உருவாக்கினார். இவ்வாறு இரகுநாத நாயக்கர் உருவாக்கிய அமைப்பிற்கு “இரகுநாதமேளம்” என்ற பெயரைச் சூட்டினார். இவ்வாறு இரகுநாத மேள அமைப்புடன் உருவாக்கப்பட்ட வீணைகள் தாம் “தஞ்சை வீணை” என்ற சிறப்புடன் இன்று பாரெல்லாம் பவனி வருகின்றன. எனவே இன்றைய தஞ்சை வீணை மரபின் தந்தையாக இரகுநாத நாயக்கரையே போற்ற வேண்டும்.
3.தஞ்சை அகழி
தஞ்சை நகரைச் சுற்றி அமைந்துள்ள கோட்டைச்சுவரின் வெளிப்புறத்தில் நீர் அரணாக சற்றேறக்குறைய 150 அடி அகலத்திற்கு நாற்புறமும் நான்கு மைல் சுற்றளவில் அகழி அமைக்கப்பட்டிருந்தது. அதனோடு இணைந்து தஞ்சைப் பெரியகோயிலைச் சுற்றி சிறிய கோட்டையும் அதன் நாற்புறமும் அகழியும் அமைக்கப்பட்டிருந்தது. பெரிய கோயிலை ஒட்டியுள்ள வடபுறத்தே அமைந்துள்ள அகழியானது. கி.பி.1935 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட மேட்டூர் நீர்த்தேக்கத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பெற்ற கல்லணைக் கால்வாய், அதாவது புது ஆறு, வடபுற அகழியோடு சேர்ந்து ஆற்றுக்காலாக மாறியது. தற்பொழுது தஞ்சை நகரின் தென்புற அகழி அழிந்துவிட்டது. மேற்கு, கிழக்கு, வடபுற அகழிகள் இன்றளவும் காணப்படுகின்றன.
4. தேர் நிறுத்தம்
தேர் நிறுத்தம் தேர்முட்டி எனவும் அழைக்கப்பெறும். தேர்கள் உள்ள அனைத்து கோவில்களுக்கும் தேர்முட்டி உள்ளது. வீதி உலா வரும் தேர் நிலையாக, பாதுகாப்புடன் நிறுத்தவும், பின்னர் அது புறப்படவும் தேர் நிறுத்தங்கள் பயன்படுகின்றன. இது அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவரை உலாவிற்காக வைப்பதற்கான படிக்கட்டாகவும், அலங்கார மேடையாகவும் செயல்படுகின்றது. தஞ்சாவூரில் மேலவீதியில் உள்ள தேர் நிறுத்தம் செங்கல், சுண்ணாம்பு கலவை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது நாயக்கர் காலக்கட்டுமானத்துடன் திகழ்வதால் இது நாயக்கர் காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம்.
5. தஞ்சை நால்வர்
கி.பி.17 ஆம் நூற்றாண்டில் தேவார பண்முறை அறிஞர் ஒருவர் புகபெற்று விளங்கினார். இவருக்கு இரண்டு ஆண் மக்கள், கங்கை முத்து, முத்துராமலிங்கம் என்ற இருவரும் தஞ்சையில் ஆட்சி செய்த மராட்டிய மன்னர் துளஜாவின் அரசவையில் இசைவாணர்களாக பெயர் பெற்று விளங்கினர். இவருடைய புதல்வர்கள் சுப்புராயன், சிதம்பரம் ஆகிய இருவரும் நடனப்பணி செய்து வந்தனர். இவர்களுள் சுப்புராயன் அவர்களுக்கு நான்கு புதல்வர்கள். மூத்தவர் சின்னையா கி.பி 1802 ஆம் ஆண்டிலும், இரண்டாமவர் பொன்னையா கி.பி.1804 ஆம் ஆண்டிலும் மூன்றாமவர் கி.பி.1808 ஆம் ஆண்டில், நான்காமவர் கி.பி.1810 ஆம் ஆண்டிலும் பிறந்தனர்.
செம்பனார் கோயிலில் சுப்பராய ஓதுவாரும் அவருடைய பிள்ளைகள் நால்வரும் சிவனுக்கு மாலை தொடுக்கும் பணியோடு, தேவாரம் பாடும் இன்னிசைப் பணியும் செய்து வந்தனர். செம்பனார்கோயில் சென்ற துளஜா மன்னர் இவர்களது இசைப் பெருக்கினை தற்செயலாக கேட்க நேர்ந்த்து. இத்தகு சிறப்பு மிக்க சைவ விற்பன்னர்களை தஞ்சைக்கு அழைத்து வந்து தஞ்சைப் பெரியகோயிலில் இசை, நடனப் பணியினைத் தொடர்வதற்கு ஏற்பாடு செய்தார். இந்நால்வரின் இசை ஞானத்தை வளர்க்க எண்ணிய அரசர் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதரிடம் பயிற்சிபெற அனுப்பினார்.
பரத நாட்டியத்தைக் கச்சேரி பாணியில் எந்த இடத்திலும், எப்போதும் நடத்தக் கூடிய தரமான வரன்முறையை வகுக்க வேண்டும் என்ற எண்ணம் பொன்னையாவின் உள்ளத்தில் தோன்றியது. அதற்காக ஆழ்ந்த ஆராய்ச்சி செய்தார், அழகான முறைகளை வகுத்தார். இன்னிசைக்கு ஆரம்பப் பாடமாக சரளி, ஜடை, அலங்காரம் இவைகள் அமைந்த சிறப்பைப் போலவே, நாட்டியத்திற்கு ஆரம்பப் பாடமாக அடைவு 10 என வகுத்த பெருமை பொன்னையாவுக்கு உரியது.தட்டு அடைவு, நாட்டு அடைவு, குதித்து அடைவு, ஜாதி அடைவு, தட்டுவெட்டடைவு, மெய் அடைவு, அறுதி அடைவு, வெட்டு அடைவு, நடை அடைவு, முடிவடைவு என்ற பத்து வகையான அடைவுகளும் பொன்னையா வகுத்த முறையாகும். இந்த பத்து அடைவுகளையும் ஒவ்வொன்றிலும் பன்னிரண்டு உட்பிரிவுகளுடன் மொத்தம் 120 அடைவுகளாக விரிவுபடுத்தினார்.
6.கல்யாணசுந்தரம் மேல் நிலைப்பள்ளி
தஞ்சாவூரில் கி.பி. 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் நாள் தோற்றுவிக்கப்பட்ட பழம் பெருமை மிக்க பள்ளி என்று அனைவராலும் K.H.S. என்று அழைக்கப்பெறும் கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி ஆகும். இப்பள்ளியைத் தோற்றுவித்த பெருமைக்குரியவர்கள் திரு.K.கோபால்சாமி ஐயங்கார், திரு.K.தர்மராசய்யர், திரு, T.R. அரங்கசாமி ஐயங்கார் ஆகியோர் ஆவர். புகழ்மிக்க வழக்கறிங்கராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த திரு.கல்யாணசுந்தரம் ஐயர் அவர்களுடைய பேருதவியால் இப்புள்ளி அரசினர் ஒப்புதல் பெற்ற பள்ளியாக மாறியது. இதன் காரணமாக இப்பள்ளி கல்யாணசுந்தரம் உயர்நிலைப்பள்ளி எனப் பெயர் பெற்றது. கி.பி. 1927 ஆம் ஆண்டு இப்பள்ளியின் நிருவாகம் கல்யாணசுந்தரம் கல்விக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்று முதல் அக்கல்விக்குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிருவாகக்குழு இப்பள்ளியின் வளர்ச்சிக்கு உழைத்து வருகின்றது.
7.நெற்களஞ்சியம்
தொல்பழங்கால மனிதர்கள் நாடோடியாக இருந்து ஒரு காலகட்டத்தில் நிலையாகத் தங்கி வேளாண்மை செய்து உணவு உற்பத்தி செய்யத் தொடங்கிய காலமான புதிய கற்காலத்தில் தங்களுக்குத் தேவையான தானியங்களை சேமிக்கத் தொடங்கினர். பானைகள், குழிகளில் தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டன. தொடர்ந்து பெருங்கற்காலத்தில் தானியங்கள் சேமித்ததற்கான பல்வேறு அகழாய்வு சான்றுகள் கிடைத்துள்ளன. பல்வேறு கால கட்டங்களில் தானியங்களை சேகரிக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது. பிற்காலத்தில் உருவான தானியக்கிடங்குகள் கொட்டாரம் எனப்பட்டன. காவிரியை ஒட்டிய பகுதிகளில் பல்வேறு கோவில்களில் நெல் தானியங்களை சேமிப்பதற்காகவே நெற்களஞ்சியங்கள் உருவாக்கப்பட்டன.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மூன்று நெற்களஞ்சியங்கள் உள்ளன. பாபநாசம் திருப்பாலத்துறை பாலைவனநாதர் கோவிலின் அச்சுதப்ப நாயக்கரும் அவரது மகனுமான ரகுநாத நாயக்கரின் காலத்தில் இருந்து ஆசிரியர் கோவிந்தப்ப தீட்சிதரால் இந்நெற்களஞ்சியம் கட்டப்பட்டுள்ளது. இதில் 3000 கலம் நெல் சேமிக்கும் அளவு உடையது.
8. சங்கீத மஹால்
இளம்பெண்கள் இன்னடம் புரியும், நாடகசாலைகள், தஞ்சையில் இருந்ததாக, திருவிசைப்பாவில், கருவூர்தேவர் பதிவு செய்து வைத்துள்ளார். இந்த மரபு தஞ்சையில் தொடர்ந்து வந்துள்ளது என்பதற்குச் சான்றாக, சங்கீதமஹால் உள்ளது. தமிழகத்தில் எஞ்சியுள்ள ஒரே அரண்மனையில், இசையும், நடனமும் அரங்கேறும் மிகும் பழமையான சங்கீதமஹால் இன்றளவும் நல்ல நிலையில் உள்ளது. ஒரு சிறப்பாகும். “Thanjavur The Seat of Music” என்பதற்கு முதன்மைச் சான்றாக இம்மஹால் உள்ளது.
அரண்மனை வளாகத் தரைத்தளத்தை விட நான்கு அடி இறக்கத்திலேயே இக்கட்டடத்தின் கீழ்தளம் உள்ளது. செவ்வக வடிவில் உள்ள இக்கட்டடம் இரண்டு தளங்களைக் கொண்டது. தரைத்தளம் மன்னர், அரசப் பிரதிநிதிகள், வித்வான்கள் மற்றும் குடிமக்கள் அமரும் இடமாகவும், மேல்தளம் அரசகுல மகளிர் அமர்ந்து நிகழ்ச்சிகளைக் காணும் வகையிலும் வடிவமைக்கப்பட்டது. தரைத்தளம் இருபிரிவுகளாக உள்ளது. மிகப்பெரிய மேடை இசைக்கலைஞருள் கச்சேரி செய்யவும், அதன் முன் பகுதி பார்வையாளர்கள் அமர்ந்து இருக்கும் வகையிலும் இருக்கிறது.
நாயக்கர் காலத்தில் இம்மஹால் “நவரத்தின மயினா நாடகசாலை” (நவரத்தினங்கள் பதிக்கப்பட்டு ஜொலிக்கும் மஹால்) எனவும், மராட்டிய மன்னர்கள் காலத்தில் “சங்கீதமஹால்” எனவும் அழைக்கப்பட்டது. இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காகத் தனித்தன்மை, சிறப்புகள் கொண்ட கட்டக் கலை அமைப்புடன் உள்ளது. இதன் ஒலிப் பிரதிபலிக்கும் அமைப்பு மிகவும் சிறப்பானதாகும். பாடகர் பாடும் மேடைக்கு முன்பாக உள்ள தொட்டி போன்ற அமைப்பில் நீர் நிரப்பப்படும். இது ஒலியைப் பிரதிபலித்து மகாலில் முழுவதும் ஒரே சீராகப் பாடல்களைக் கேட்க உதவும். மேலும் எதிரொலிகள் எழுப்பாமல் இருக்கும் வகையில் சுவர்களிலும், பிரதானங்களிலும் சிறு, சிறு துளைகள் உண்டு. மேலும் கனமான “பங்கா” என்ற அமைப்பும் ஒலியை உள்வாங்கிக் கொள்ளும், மேல் தளத்தில் உள்ள ஜன்னலின் நெருக்கமான கம்பிகளும் கூட இசையை இனிமையாகக் கேட்க உதவுகின்றன. மகால் வளாகத்தில் வண்ண வண்ண லாந்தர் எனப்படும் விளக்குகளும் சரவிளக்குகளும் அலங்கரித்தன. இன்றைய நவீன மைக், ஒலிபெருக்கிகள் இல்லாத காலத்தில் சுமார் 1000பேர் எந்த இடத்தில் அமர்ந்தும் இசையைச் சீராகக் கேட்கச் செய்யும் தொழில்நுட்பம் வாய்ந்த அற்புதமான கட்டமைப்பாகும் இம்மஹால், சென்ற நூற்றாண்டில் இங்கு ராஜா சரபோஜி கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட போது இதன் பழைய கட்டமைப்புகள் மாற்றப்பட்டன. மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் உள்ள சங்கீதமகாலில் இன்றும் இசை, நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
9.சரசுவதி மகால் நூலகம்
மிகச்சிறந்த கலைக்கும், கலாச்சாரத்திற்கும், இலக்கியங்களுக்குமான ஏறத்தாழ 10 நூற்றாண்டுகளுக்கு மேல் பெரும் புகழ்பெற்று விளங்குவது தஞ்சையாகும். தஞ்சையின் தனிப்பெறும் பண்பாட்டிற்கு, அடுத்தடுத்து அமைந்து சோழ, நாயக்க, மராட்டிய மரபுகள் வளம் சேர்த்தன. சோழர்கள் படைத்த கோயில்களும், சிற்பங்களும், ஓவியங்களும் தமிழகத்தின் தனிப்புகழுக்கு உதவின. அவர்களை அடுத்துத் தொடர்ந்த நாயக்கர்கள் இலக்கியத்தையும், நாடகத்தையும், இசைக்கலையினையும் வளர்த்தும் பரப்பியும் வந்தனர். மராட்டியர்களும் அவர்களை அடுத்தோர்களும் அவர்களின் முன்னோர்களின் கலைச்செல்வங்களைப் பாதுகாத்ததோடு வளர்த்தும் வந்தார்கள். மராட்டிய அரசர்களுள் பெரும்பாலோர் நல்ல அறிஞர்களாகவும், சிறந்த எழுத்தாளர்களாகவும் திகழ்ந்தார்கள்.
அறிவுக்களஞ்சியமாகவும், காலத்தை வென்ற கலைப் பெட்டகமாகவும் விளங்கும் சரசுவதி மகால் நூலகம் நாயக்க மன்னர் காலத்தில் (ரகுநாத நாயக்கர் 1600-1634 காலத்தில் விஜய விலாசம் என்ற பெயரில் நூலகமாக அரண்மனை வளாகத்தில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது) தொடங்கப்பட்டு மராத்திய மன்னர்கள் காலத்தில் வளர்க்கப்பட்டது. மன்னர் இரண்டாம் சரபோஜி (1798-1832) இந்நூலகத்தை வளர்த்துச் சிறப்புச் செய்த பேராளராவார். உலகப் புகழ்பெற்ற இந்நுலகத்தில் அவரால் சேகரிக்கப்பட்ட பல்வேறு மொழிகளைச் சார்ந்த அரிய சுவடிகளும், புத்தகங்களும் ஏராளமாக உள்ளன.
சரசுவதி மகால் நூலகம் 1918 ஆம் ஆண்டில் ஒரு இலட்ச ரூபாய் வைப்பு நிதியோடு கூடியதாக அரசாணை எண். 1306 Home (Education) dt. 5.10.1918ன் படி இந்நூலகத்தை நிருவகிக்க ஐந்து நபர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு இவ்வற நிலைய வைப்பு நிதியின் வளர் தொகையினையும் தமிழக அரசாலும், இந்திய அரசாலும் அளிக்கப்படும் மானியங்களையும் பயன்படுத்தி அறிஞர்கட்குப் பயன்படத்தக்க வகையில் சுவடிகளைப் பாதுகாத்தும், அரிய சுவடிகளை நூல்களாகப் பதிப்பித்து வெளியிட்டும் நூலகத்தை வளர்ச்சியுறச் செய்தது. இப்பணி தொடர்ந்து இன்று வரை நடைபெற்று வருகின்றது.
மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின் படி தமிழக அரசு, அதன் ஆணை எண். எம். எஸ்.209, கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில் துறை (கே.1) நாள். 1.2.1983) இல் தஞ்சை மன்னர் சரபோஜியின் சரசுவதி மகால் நூலகத்தினைக் கீழ்க்கண்ட மேலாண்மையாளர்களைக் கொண்ட தமிழ் நாட்டின் பதிவு செயற்பாடு சட்டம் 1975 (சட்டம் 27-1975)ன்படி 1986 முதல் சங்கமாக பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகிறது.